×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சட்ட விரோத காவலில் உள்ளதால் அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அவருடைய மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ‘‘செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகதந்தது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு பரிசோதனை செய்ததில் அவரது இதய வால்வுகளில் 3 அடைப்புகள் உள்ளது என்று தெரியவந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர்.

அதை தொடர்ந்து அமலாக்க துறை சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்களும் பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், அந்த பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் அமலாக்கத்துறை உள்ளது. அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவுள்ளனர் என்றார். அப்போது, குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மதுரை எய்ம்ஸ் டாக்டர்களா? என்று கேட்டார்.

இதைதொடர்ந்து ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடும்போது, ஒருவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டால் அவரை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. இந்த வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இரு மருத்துவ குழுவினரும் பரிசோதித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது. இரு மருத்துவக் குழுவினரும் அளித்த அறிக்கை ஒரே மாதிரி முடிவைத்தான் தெரிவித்துள்ளன. அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே இருக்க வேண்டும். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றால், அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிலிருந்து அதே போன்ற சிறந்த இதய நோய் சிகிச்சை நிபுணர்களை கொண்ட மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்ற செய்ய வேண்டும். அவரை அமலாக்க பிரிவினர் தங்கள் மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் உள்ள நாட்களுடன் கணக்கில் எடுத்துக் கொள்வதா? என்பது குறித்து வரும் 22ம் தேதி தான் முடிவு செய்யப்படும். மேலும், செந்தில் பாலாஜியின் மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணைையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

* மருத்துவமனையில் அனுமதி
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு 9.30 மணியளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்தினர். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால், மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது அறையின் வெளியிலும் சிறைத்துறை போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Enforcement Department ,Chennai High Court ,Chennai ,Minister Senthil Balaji ,Omantur Government Hospital ,Kaveri Hospital ,Enforcement ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...